முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு தேனி: தமிழக - கேரள எல்லைப் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும், விவசாய நிலங்களுக்கான தண்ணீர் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை பெய்த போதிலும் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் போதிய நீர் வரத்து இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து கொண்டே சென்றது.
கடந்த மாதம் ஜூன் ஒன்றாம் தேதி அணையின் நீர் மட்டம் 118 அடியாக இருந்தபோது கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு முதல் போக சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 200 கன அடி வீதம் தினசரி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தென்மேற்குப் பருவ மழை பெய்து அணையின் நீர் மட்டம் உயரக்கூடும் என எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய நீர் வரத்து இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த ஜூலை மாதம், மூன்றாம் தேதி அணையின் நீர் மட்டம் 114 அடியாக சரிந்தது. அணையின் நீர் வரத்து 112 மில்லி கன அடியாக மட்டுமே இருந்தது. இதனால் முதல் போக சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில், தற்போது கேரளா மாநிலத்தில் கன மழை பெய்து வருவதால் தமிழக கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள, முல்லைப்பெரியாறு அணையில் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்துக் காணப்பட்டது.
கடந்த ஜூலை மூன்றாம் தேதி 112 மில்லி கன அடியாக இருந்த அணையின் நீர்வரத்து மழையின் காரணமாக நேற்று காலை 2349 மில்லி கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 119.55 அடியாக உயர்ந்து, 120 அடியை எட்டக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வந்தால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் முதல் போக சாகுபடி தடையின்றி நடைபெறும் என விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வருகிற மழையின் காரணமாக, அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஹிமாச்சல்: பியாஸ் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு - நிலச்சரிவில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் மீட்பு!