கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இரமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது. இந்த அணையிலிருந்து தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசன நிலங்களின் முதல்போக நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் அணையின் நீர்மட்டம் குறைவு, பருவமழை ஏமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது தாமதமானது. இதில் கடந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்காக, இரண்டு மாதம் தாமதமாக ஆகஸ்ட் இறுதியில்தான் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கில் ஒரு நெல் போக சாகுபடி மட்டுமே நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டும் போதிய அளவு மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உயராமல் கடந்த ஜூலை மாதம் இறுதி வரை 115 அடியாக இருந்து வந்தது. இதனையடுத்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் பெய்த கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 137 அடியை எட்டியுள்ளது. இதனால் தற்போது, முதல் நெல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையையடுத்து அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.