தேனி மாவட்டம் உத்தமபாளையம், போடி வட்டத்திலுள்ள மானாவாரி நிலங்களுக்கு ஆற்றுப்பாசனம் கிடைக்க வழியில்லாததால் மழையை மட்டுமே நம்பியுள்ளன. இந்த நிலங்கள் பயன்பெறும் வகையில் முல்லைப் பெரியாறு அணையின் தலைமதகிலிருந்து 40.80 கி.மீ தூரத்திற்கு கால்வாய் வெட்டி கூடலூர், கம்பம் பள்ளத்தாக்கு, பாளையம், தேவாரம் ஆகிய ஊர்களின் வழியாக சுத்தகங்கை ஓடைக்கு முல்லைப் பெரியாறு அணையின் உபரி நீரைக் கொண்டுசெல்லும் திட்டம்தான் 18ஆம் கால்வாய் திட்டம்.
அணையின் நீர்மட்டம் உயரும் போதெல்லாம் இந்தக் கால்வாய் வழியாக தண்ணீரைத் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இக்கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் நீரால் உத்தமபாளையம், போடி வட்டத்திலுள்ள 44 கண்மாய்கள் நிரம்பும். இதன் மூலம் 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கடந்த சில வாரங்களாக பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் 18ஆம் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துமாறு கடந்த சில வாரங்களாக விவசாயிகள் அரசு அலுவலர்களிடம் வலியுறுத்தி வந்ததையடுத்து, இன்று காலை முதல் கால்வாயிலிருந்து தண்ணீரைத் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.