தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையை நம்பி இருபோக சாகுபடி நடைபெற்று வரும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தண்ணீர் திறப்பது வழக்கம். இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழை சரிவர பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்தே காணப்பட்டது. இதனால் தண்ணீர் திறக்க முடியாத நிலை உண்டானது. இந்நிலையில், கடந்த மாதம் கேரளாவில் பெய்த கன மழையால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
இதனைத்தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். தற்போது, இன்று தேக்கடியில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் சுரங்கப்பாதை வழியாக தமிழ்நாடு பகுதிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து வைத்தார். மதகுப்பகுதியில் பூக்களை தூவி வழிபட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது.