கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. இது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது. கோடைக் காலங்களில் போதியளவு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.
இந்நிலையில் ஜூனில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையின் நீர்வரத்து குறைந்தே காணப்பட்டது. இதனால், நீர்வரத்து கம்பம் பள்ளத்தாக்கில் முதல்போக சாகுபடி செய்ய விவசாயிகள் தயங்கினர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகக் கேரளாவில் வெளுத்து வாங்கிய தென்மேற்குப் பருவமழையினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்மூலம் மூன்று நாட்களில் மட்டும் 15 அடிவரை நீர்மட்டம் உயர்ந்தது. மேலும், இன்று காலை ஆறு மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 130 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீரைத் தேக்குவதற்கு அனுமதிக்கப்பட்டளவு 142 அடியாகும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,404 கனஅடியாக உள்ளதால், தமிழ்நாட்டிற்கு 1700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையொட்டி, முதல்போக சாகுபடிக்கு காலம் கடந்துவிட்டதால் அடுத்த போகத்திற்காவது உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.