கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் குழுவை நியமித்தது.
ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனைகளை இக்குழுவினர் வழங்குவர். அதன்படி அணையில் பணிகள் மேற்கொள்ளப்படும். இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் குல்சன்ராஜ், உறுப்பினர்களாக தமிழ்நாடு அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், கேரள அரசு சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் செயலர் அசோக் ஆகியோர் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி ஆய்வு செய்த மூவர் குழுவினர், அதன் பின்னர் ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் இன்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்கின்றனர்.
பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போது, அதே தீர்ப்பில் பெரியாறு அணையை ஒட்டியுள்ள பேபி அணையைப் பலப்படுத்திய பின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் எனவும் உத்தரவிட்டது.