தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு மாற்று வழியாக முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி தமிழக மலர் விவசாய சங்கம் உட்பட அனைத்து விவசாயிகள் சார்பாக 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம்: விவசாயிகள் மனு ! - mullai periyar canal
தேனி: முல்லை பெரியாற்றில் இருந்து குழாய் வழியாக ஆண்டிபட்டி பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து விவசாயிகள் பேசுகையில், ”வைகை அணைக்கு அருகில் அமைந்துள்ள ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனால் கால்நடை வளர்ப்பு, விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய் வழியாக தண்ணீர் கொண்டுவந்து இங்குள்ள குளம், கண்மாய் மற்றும் ஊரணிகளில் தேக்குவதற்கு ஏதுவாக புதிய திட்டம் செயல்படுத்தக் கோரி தேர்தல் புறக்கணிப்பு, வீடுகளில் கருப்புக்கொடி கட்டுதல், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
இதனையடுத்து இத்திட்டம் செயல்படுத்துவதாக கூறப்பட்டு, இதற்கான ஆய்வுப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. ஆனால் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 110 விதியின்கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர், ஆண்டிபட்டி பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் திட்டம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே ஆண்டிபட்டி பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையைவிரைந்து செயல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம்” என்றனர்.