தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் பகுதியில் செல்லக்கூடிய முல்லைப் பெரியாற்றில் கடந்த 14ஆம் தேதி இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு காவல் துறையினர், உத்தமபாளையம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சென்றனர். அங்கு ஆற்றுப் பகுதியிலிருந்து இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கம்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த சிவகுருநாதன் (28) எனத் தெரியவந்தது. திருமணமாகாத இவர் மீது கம்பம், உத்தமபாளையம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதால், உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்ததாகவும் தெரிய வந்தது.
இறந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததால், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து உத்தமபாளையம் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கம்பம் சுருளிப்பட்டி சாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த மணிகண்டன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவகுருநாதனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட சிவகுருநாதன் அவ்வப்போது மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டனும் அவரது நண்பர்கள் ஒன்பது பேரும் சேர்ந்து சிவகுருநாதனைக் கொலை செய்யும் நோக்குடன் கடந்த 12ஆம் தேதி, அவரை அழைத்துக்கொண்டு கம்பம் சுருளிப்பட்டி சாலையிலுள்ள தொட்டமன்துறை பகுதியில் சென்று மது அருந்தியுள்ளனர்.
போதை தலைக்கேறிய பிறகு, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு சிவகுருநாதனைக் கழுத்து, முதுகு, கைவிரல் போன்ற இடங்களில் வெட்டி முல்லைப் பெரியாற்றில் உடலை வீசிச் சென்றதாக ஒப்புக்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட ஏழு பேர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கம்பம் சுருளிப்பட்டி சாலையை சேர்ந்த மணிகண்டன் (34), சதீஷ் என்ற பிரவீன்குமார் (26), வைத்தியர் கணேசன் (44), ஆசை என்ற ராஜா (25), விக்கி என்ற விக்னேஷ் (22), குமார் (35), பாண்டி என்ற முத்துப்பாண்டி (29) உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து உத்தமபாளையம் காவல்துறையினார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்க: குடும்பம் நடத்த மறுத்த மனைவி - நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த கணவன்!