தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணை: திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்த ஒப்பந்தத்தின் வயது 134!

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணையின் 999 ஆண்டு தண்ணீருக்கான பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் மேற்கொண்டு இன்று முதல் 134ஆம் ஆண்டு தொடங்குகிறது.

mullai-periya-dam-agreement-134th-sign-day

By

Published : Oct 29, 2019, 9:01 PM IST

வைகை வளப்படுத்தாத கிழக்குச் சீமையை, மேற்கில் பாய்ந்து அரபிக்கடலில் வீணாகக் கலந்த ஆற்றை தமிழ்நாடு பக்கம் திருப்பி அன்றைய ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை வளப்படுத்த திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஆங்கிலேய அரசு ஒரு ஒப்பந்தம் போட்டது.

அந்த ஒப்பந்தத்தில்,

  • திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குள் வனப்பகுதியில் எட்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் தேக்கும் தண்ணீரை சென்னை மாகாணத்திற்கு குத்தகைக்கு கொடுக்கவும், அதற்கு உண்டான பணிகளுக்குத் தனியே 100 ஏக்கர் இடம் கொடுப்பதற்கும் குத்தகைத் தொகையாக ஏக்கருக்கு ரூ.5 வீதம் தருவதாக சென்னை ராஜதானி ஒப்புக்கொண்டது.
  • அணை கட்டும் செலவு முழுவதையும் சென்னை ராஜதானிதான் மேற்கொள்ள வேண்டும்.
  • ஏரியின் தண்ணீரைத் தவிர நிலத்தின் மீது உரிமை கொண்டாடக் கூடாது, அணைக்கட்டின் பராமரிப்பு, பழுதுபார்த்தல் பணிகளைத் திருவிதாங்கூரின் மீது சுமத்தக் கூடாது

-என்ற மகாராஜாவின் நிபந்தனையை அடுத்து 1886 அக்டோபர் 29இல் பெரியாறு அணை மீது 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் தயாரானது.

முல்லைப் பெரியாறு அணை

குத்தகை நிலத்தில் தேங்கியுள்ள நீர்ப்பரப்பின் அடித்தளத்திலிருந்து 155 அடி உயர அணையைக் கட்டி தண்ணீரை ஒரு குகை வழியாக சென்னை மாகாணத்திற்கு கொண்டுசெல்வதற்கும் இறுதி செய்யப்பட்டது. மராமத்துப் பணிகளைச் செய்வதற்கான பொருள்களை எடுத்துச்செல்ல சென்னை மாகாணத்திற்கு முழுமையான உரிமை வழங்குவதுடன், அணையினுள் அடங்கும் மரம், மரக்கட்டைகளை அணையின் நலன் கருதி செயல்படுத்தும் எந்த ஒரு திட்டங்களுக்கும் சென்னை மாகாண அரசு எவ்வித கட்டணங்களும் கட்ட வேண்டியது இல்லை. போக்குவரத்தின் முழு உரிமை, அணையின் அனைத்து செயல்பாடுகளுக்குமான உரிமை, அதிகாரம், சுதந்திரம் சென்னை மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கர்னல் பென்னி குயிக் தலைமையிலான ஆங்கிலேய ராணுவத்தின் கட்டுமான துறை முல்லைப் பெரியாறு அணைக்கட்டும் பணியை மேற்கொண்டது. அவரது தீவிர முயற்சியினால் 1895இல் முல்லைப் பெரியாறு அணை ரூ. 43 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. அதனை சென்னை மாகாண ஆளுநர் வென்லாக் தேக்கடிக்கு வந்து திறந்துவைத்தார்.

இந்நிலையில் அணையில் போக்குவரத்தின் முழு உரிமை, அணையின் அனைத்து செயல்பாடுகளுக்குமான உரிமை, அதிகாரம், சுதந்திரம் சென்னை மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஒப்பந்தத்தில் இருந்தாலும் இந்த 134 ஆண்டுகளில் அந்த உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாடு அரசு இழந்துள்ளது.

கர்னல் பென்னி குயிக்

முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் வனச்சட்டத்தை மீறி 1954இல் கேரள அரசு ஆரண்ய நிவாஸ் என்னும் நட்சத்திர உணவக விடுதியைக் கட்டியது. ஆரம்ப காலத்தில் தேக்கடி ஏரியில் ஒரே ஒரு படகினை மட்டும் இயக்க தமிழ்நாடு அரசிடம் அனுமதி வாங்கிய கேரள அரசு, 1970இல் அணையில் மீன்பிடி உரிமையைக் கேட்டுப் பெற்றவுடன் படகு போக்குவரத்தினை முழுமையாகக் கையகப்படுத்திக் கொண்டது.

பலப்படுத்தும் பணி முடிந்தும் அணை நீர்மட்டத்தை உயர்த்தவிடவில்லை:

2006 பிப்ரவரி 27இல் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியும் கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுத்தது. அதனையடுத்து தமிழ்நாடு சார்பாக நடத்தப்பட்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு 2014 மே 7இல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வு, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்ற உத்தரவைத் தொடர்ந்து, 2014 நவம்பர் 21இல் பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நியமித்தக் கண்காணிப்புக் குழு கூட்டங்களில் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் உயர்த்த பேபி அணையை பலப்படுத்துதல், வல்லக்கடவு வழியாக பெரியாறு அணைக்கு செல்லும் பாதையை சீரமைப்பது, பெரியாறு அணைக்கு தரைவழியில் மின்சாரம் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்வது, பிரதான அணையிலிருந்து பேபி அணை செல்லும் இடைப்பட்ட பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால் தமிழ்நாடு அரசும் அலுவலர்களும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் போனதால் அந்தத் தீர்மானங்கள் எழுத்தளவோடு நின்றுபோனது.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தி மூழ்கிய உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஆக்கிரமிப்பு வழக்கு; கேரள அரசுக்கு நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details