தேனி அருகே உள்ள சின்னமனூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்து முன்னணி சார்பாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.ரவீந்திரநாத்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் துவங்குவதற்கு முன்பாக விழா மேடையில் எம்.பி ரவீந்திரநாத்குமார் காவி துண்டு அணிந்து கொண்டு பேசினார்.
இந்து என்ற உணர்வு முதலில் இருக்க வேண்டும் - தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் சர்ச்சை பேச்சு!! - தேனி
தேனி : விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் துவங்குவதற்கு முன்பாக விழா மேடையில் எம்.பி ரவீந்திரநாத்குமார் காவி துண்டு அணிந்து கொண்டு நாம் அனைவரும் இந்து என்ற உணர்வு முதலில் இருக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு சிறுபான்மையின மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவர் பேசுகையில் ,"ரயில்வே துறை சார்பாக திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க சென்றதால் இங்கு வருவதற்கு சற்று தாமதம் ஆகிவிட்டது. தேனி மாவட்டத்திற்கான போடி - மதுரை அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரியும், அதே போல் திண்டுக்கல் - லோயர்கேம்ப் புதிய இரயில் திட்டத்தை செயல் படுத்தக்கோரியும் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். கடந்த ஆண்டு சின்னமனூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நான் தான் துவங்கி வைத்தேன்
தற்போது பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்பும் நானே துவக்கி வைக்கிறேன். கடந்த ஆண்டு இதே ஊர்வலத்தின் போது மோடி அவர்களே அடுத்த பிரதமராக வருவார் எனக் கூறினேன், அதே போன்று அவரே பிரதமராக மீண்டும் வந்துவிட்டார். இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாம் அனைவரும் இணைந்து வலிமையான புதிய பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாக பாடுபட வேண்டும். நாம் அனைவரும் முதலில் இந்து என்ற உணர்வு நமக்கு ஏற்பட வேண்டும் என்று கூறினார். இவரது இந்த பேச்சு சிறுபான்மையின மக்களிடையே கடும் எதிர்ப்பைக் கிளம்பியுள்ளது.