தேனி மாவட்ட நாடாளுமன்றத்தொகுதி மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி) ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கம்பம் அரசு மருத்துவமனை அருகே பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சேலைகள் பறிமுதல்! அதனடிப்படையில் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஆம்னி பேருந்து அலுவலகத்தில் அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சை நிற சேலைகள் மூட்டைகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சேலைகள் திருப்பூரிலிருந்து கம்பத்திற்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகளை உத்தமபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.