தமிழ்நாட்டில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்துவந்தது. இதைபோல் தேனி மாவட்டத்திலும் தொடர்மழை பெய்து வந்ததால், மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் நேற்று பெய்த கனமழையால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகையின் பிறப்பிடமான மேகமலை வனப்பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கடமலைக்குண்டு, கண்டமனூர், அம்மச்சியாபுரம், அய்யனார்புரம் உள்ளிட்ட வைகை ஆற்றின் வழித்தடத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வைகையில் ஏற்பட்ட வெள்ளத்தால் அம்மச்சியாபுரம் பகுதியில் உள்ள கருப்பசாமி கோயிலை தண்ணீர் சூழ்ந்து வெள்ளம்போல் காட்சியளிக்கிறது. கனமழை காரணமாக ஏற்றபட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வைகை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.