தேனியில் மொபைல் உதிரி பாக கடையின் பணியாளர், ரூ.17 லட்சம் மோசடி செய்த நிலையில், கடையில் உரிமையாளர் பணத்தை திருப்பி கேட்டபோது துப்பாக்கியைக் காட்டி சுட்டு விடுவதாக மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தேனி:ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மதன் சிங் என்பவர் தேனியில் மொபைல் உதிரி பாகங்கள் கடை வைத்து சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், அதே மாநிலத்தைச் சேர்ந்த தூதராம் என்பவரை அழைத்து வந்து மூன்று லட்சம் முன்பணம் கொடுத்து தனது கடையில் பணியமர்த்தியுள்ளார்.
இரண்டு வருடங்களாக தனது கடையில் தூதராம் பணிபுரிந்து வந்த நிலையில், அவரை கடையின் மேலாளராக ஆக்கியுள்ளார் மதன் சிங். இந்நிலையில், மதன் சிங் தனது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை பார்ப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் சென்றிருந்தபோது, தூதராமிடம் கடையின் முழு பொறுப்பையும் ஒப்படைத்து விட்டுச் சென்றிருக்கிறார்.
அப்போது, தூதராம் கடையில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்காக ஒட்டப்பட்டிருக்கும் க்யூ ஆர் ஸ்கேன் கோடிற்கு பதிலாக, தனது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஸ்கேன் கோடை ஒட்டி மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: 2010 எஸ்ஐ வெற்றிவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி வாகன விபத்தில் உயிரிழப்பு!
மேலும், கடையின் முழு பொறுப்பையும் தன்னிடம் நம்பி விட்டுச் சென்ற மதன்சிங், திரும்பி வருவதற்குள் கடையின் வங்கிக் கணக்கு முதல் தினமும் நடைபெறும் பரிவர்த்தனை என கடந்த நான்கு மாதங்களாக சுமார் ரூ.17 லட்சம் வரை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், 17 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு கடையின் உரிமையாளர் மதன்சிங் திரும்பி வருவதற்குள் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளார். நான்கு மாதங்களுக்குப் பின் கடைக்கு வந்த மதன்சிங், கடையின் வரவு செலவு கணக்கு குறித்து பார்த்தபோது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் இருந்ததைக் கண்டும், பின்னர் போலியாக ஒட்டப்பட்டு இருந்த ஸ்கேன் கோடை கண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தூதராம் தனது பணத்தை ஏமாற்றி மோசடி வேலையில் ஈடுபட்டதை அறிந்த மதன் சிங், தூதராமிற்கு வீடியோ கால் செய்து தனது பணத்தை கேட்டபோது, பணத்தை திருப்பிக் கேட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று வீடியோ காலில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகன் சிங், தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இது குறித்து தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குன்னூர் பேருந்து விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!