தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனத்துறை துப்பாக்கி சூட்டில் விவசாயி உயிரிழந்த விவகாரம்.. உறவினர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என எம்.எல்.ஏ மகாராஜன் உறுதி!

MLA Negotiation: வனத்துறை துப்பாக்கி சூட்டில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ மகாராஜன் இறந்த விவசாயி உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

வனத்துறை துப்பாக்கி சூட்டில் விவசாயி உயிரிழந்த விவகாரம்
வனத்துறை துப்பாக்கி சூட்டில் விவசாயி உயிரிழந்த விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 8:05 PM IST

வனத்துறை துப்பாக்கி சூட்டில் விவசாயி உயிரிழந்த விவகாரம்

தேனி:நேற்று முன்தினம் (அக்.28) கூடலூர் அருகே அத்துமீறி வனத்திற்குள் நுழைந்ததாகவும், ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினரை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறி, வனத்துறையினர் விவசாயியை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவர் வண்ணத்திப்பாறை பகுதியில் தனது தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார். தோட்ட வேலைக்காகச் சென்ற அவர், அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கூடலூர் வனத்துறையினர், விவசாயி ஈஸ்வரன் அத்துமீறி வனத்திற்குள் நுழைந்ததாகவும், ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினரை கத்தியைக் காட்டி மிரட்டியதால் துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனை அடுத்து ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், நேற்றைய தினம் (அக் 29) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, துப்பாக்கியால் சுட்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது இரண்டாவது நாளாக (அக்.30) தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், ஈஸ்வரன் மீது துப்பாக்கி சூடு நடத்திய வனத்துறை அலுவலரை கொலை வழக்கில் கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ மகாராஜன் கூறும்போது, “துப்பாக்கிச் சூடு நடத்திய வனத்துறை பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்யவும், துப்பாக்கியால் சுட்ட வனத்துறை அலுவலர் மீது கொலை வழக்கு பதியவும் உறவினர்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு வனத்துறை அமைச்சரிடம் பேசி நூறு சதவிகிம் ஒத்துழைப்பு தருவதாக கூறினேன். அவர்கள் குடும்பத்திற்கு வனத்துறை அமைச்சரிடம் பேசி, அரசு வேலை வாங்கிக் தருவதாகவும் உறுதி அளித்து இருக்கின்றேன். இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்” எனக் கூறினார்.

தொடர் போரட்டத்தில் ஈடுபட்டு வந்த ஈஸ்வரனின் உறவினர்கள், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எம்.எல்.ஏ மகாராஜன் உறுதியளித்த நிலையில், போராட்டத்தை கைவிட்டு ஈஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புக்கொண்டனர்.

இதையும் படிங்க:வனத்துறை துப்பாக்கி சூட்டில் விவசாயி இறந்த விவகாரம்.. கொட்டும் மழையிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்..!

ABOUT THE AUTHOR

...view details