தேனி: தேனி மாவட்டம், கோட்டூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள புதிய நவீன ஆவின் பாலகத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின், ஆவின் பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர், தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து, 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தேனி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பால் வளம் குறித்தும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பொருட்கள் விற்பணை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா மற்றும் பால் வளம் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணைய நிர்வாக இயக்குநர் வினித் முன்னிலையில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, துறை சார்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை மாவட்டம்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, தங்கள் துறையின் செயல்பாடுகளை முழுமையாக கண்காணித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். அதன் அடிப்படையில், தேனி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தேனி மாவட்டத்தில் அதிகப்படியான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருவதால், தேவையான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகப்படியான பால் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள, துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.