தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'12 ஆண்டுகளுக்குப் பிறகு பாய்ந்தது வைகை; இது திமுகவின் சாதனை!' - அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி

12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசனத்திற்காக ஜூன் மாதம் தண்ணீர் திறந்து திமுக சரித்திர சாதனை புரிந்துள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

By

Published : Jun 5, 2021, 11:37 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் பகுதியின் முதல்போக பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று வைகை அணையின் ஏழு பெரிய மதகுகள் வழியாகத் தண்ணீர் திறந்துவைத்தனர்.

வைகை அணை திறப்பு

அணையிலிருந்து வெளியேறிய தண்ணீரை அமைச்சர்கள் மலர்த்தூவி வரவேற்றனர். இன்றுமுதல் 45 நாள்களுக்கு விநாடிக்கு 900 கனஅடி வீதமும், அடுத்த 75 நாள்களுக்கு முறைவைத்தும் ஆறாயிரத்து 739 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இந்தத் தண்ணீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, வடக்கு தாலுகா ஆகிய பகுதிகளில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் பாசன வசதி நிலங்கள் பயனடையும்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, "12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையிலிருந்தும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையிலிருந்தும் ஜூன் மாதத்தில் முதல்போக சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சரித்திர சாதனை புரிந்துள்ளது.

மேலும் வைகை அணையைத் தூர்வார வேண்டும் என்ற உழவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு கடைமடைப் பகுதியான ராமேஸ்வரம் வரை வைகை அணை தண்ணீர் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பது, மணல் திருட்டு உள்ளிட்டைவை தவிர்க்கப்பட்டு நீர்நிலைகள் பாதுகாக்கப்படும். 2006-11 வரையிலான திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மணல் திருட்டு ஏதும் நடைபெறவில்லை" எனக் கூறினார்.

அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி

இந்நிகழ்வில் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள், உழவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 12 ஆண்டுகளாக ஜூனில் போதுமான நீர் இருப்பு இல்லாததால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details