தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள்பட்ட மேலப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் கடந்த 10 வருடங்களாக செவிலியராக பணியாற்றிவருபவர் கல்பனா.
இவர் அப்பகுதியில் உள்ள 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கண்டறிந்து தடுப்பூசி போடுதல், கருவுற்ற தாய்மார்களின் விவரத்தினை கண்டறிந்து, மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 18 ஆயிரம் ரூபாய் தொகையினை, பயனாளிகளுக்குப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பிலுமிருந்து வந்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியிலிருந்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதிவரையில் மகப்பேறு உதவித் திட்டத்தில் செவிலியர் கல்பனா கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கண்டமனூர் பொறுப்பு மருத்துவ அலுவலர் சுரேந்தர் நடத்திய தணிக்கையில், போலியாக 20 தகுதியற்ற பயனாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்து அதற்கான நிதியுதவித் தொகையான 1 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை தனது வங்கிக்கணக்கில் சேர்த்துள்ளார்.
உண்மையிலேயே கருவுற்ற 12 தாய்மார்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் உதவித் தொகை வரவு வைக்காமல் தனது கணவர் கதிரவபெருமாளின் வங்கிக்கணக்கில் 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயை வரவு வைத்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவர் சுரேந்தர் அளித்த புகாரின் பேரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கையாடல் விவரம் வெளியே தெரியவரவே கல்பனா, அவரது கணவர் கதிரவபெருமாள் தலைமறைவாகிவிட்டனர்.
மேலும் பணியின்போது அவர்கள் அளித்த மேலப்பட்டி குடியிருப்பும் போலியானது எனத் தெரியவந்துள்ளது. தலைமறைவாகவுள்ள இருவரையும் பிடிப்பதற்கு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இதனிடையே கையாடல் செய்த செவிலியர் கல்பனாவை பணியிடை நீக்கம் செய்து தேனி மாவட்ட மருத்துவத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக மகப்பேறு உதவித் தொகை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்திப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற லாரி ஓட்டுநர் கைது!