தேனி:பெரியகுளம் அருகே உள்ள கோம்பை பகுதியில் கடந்த மாதம் சோலார் மின்வேலியில் மாட்டிக்கொண்ட சிறுத்தையைக் காப்பாற்றுவதற்காகத் தேனி மாவட்ட உதவி வன பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் சென்ற நிலையில் மகேந்திரனைத் தாக்கி விட்டு சிறுத்தை தப்பி ஓடியது.
இதில் மகேந்திரன் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் அதே இடத்தில் சோலார் மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது.
தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்-க்கு சொந்தமான தோட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் இது தொடர்பாக ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து இருந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் ரவீந்திரநாத் மேலாளர்கள் இருவரையும் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
தேனி மாவட்ட உதவி வன அலுவலர் மகேந்திரன் மீது சர்ச்சைகள் குவிந்த வண்ணம்:இந்த விவகாரம் தற்போது பல்வேறு சர்ச்சைகளையும், விவாதங்களையும் எழுப்பி வரும் சூழலில் சிறுத்தையை மின்வேலியில் இருந்து காப்பாற்ற முயன்ற போது உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனுக்கு ஏற்பட்ட காயங்கள் பல்வேறு சர்ச்சைகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது.
சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் பல்வேறு உண்மைகள் மறைக்கப்பட்டதாகவும் இதற்கு உதவி வன பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.