தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேகமாக நிரம்பும் மஞ்சளாறு அணை: 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை! - மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியுள்ள நிலையில் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

manjalaru dam

By

Published : Oct 29, 2019, 11:18 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து பெரும்பாலான இடங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், தேவதானப்பட்டி அருகே 57 அடி முழு நீர்மட்ட அளவான மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் 35 அடியிலிருந்து 47 அடியை எட்டியது.

மஞ்சளாறு அணை நீர்மட்டம்
நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பருவமழை படிப்படியாக அதிகரித்ததைத் தொடர்ந்து அணையின் நீர் மட்டம் 47 அடியிலிருந்து ஒரேநாள் இரவில் மூன்று அடி உயர்ந்து 51 அடியை எட்டியது. இதனையொட்டி மஞ்சளாறு அணைப் பகுதியில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ரெட் அலர்ட் விடப்பட்ட நிலையில் மழை பெய்யாமல் போனதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.

இந்நிலையில், அக்டோபர் 23ஆம் தேதி மாலை 6 மணியளவில் அணையின் நீர் மட்டம் 53 அடியை எட்டியதையடுத்து, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் இன்று மாலை 55 அடியை எட்டியது.

இதனால், கெங்குவார்பட்டி, டி. கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்ட அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு அபாய சங்கு எழுப்பப்பட்டு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நிலவரப்படி, அணையின் நீர் இருப்பு 435.32 மி. கனஅடியாக உள்ளது.

தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பொதுமக்கள் யாரும் மஞ்சளாற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளைக் குளிக்கவைக்கவோ வேண்டாம். மேலும் ஆற்று கரைப்பகுதிகளை கடக்கவும் வேண்டாம் என பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details