தேனி மாவட்டம் பெரியகுளம் சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக்(30). அவர் 2015ஆம் ஆண்டு 15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதன் காரணமாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர் பிணையில் வெளியே வந்தார்.
அந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இதற்கிடையில் அவர் 2017ஆம் ஆண்டு தேனி-பெரியகுளம் சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தார். அது தொடர்பான மற்றொரு வழக்கும் அவர் மீது பதியப்பட்டு தேனி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு போக்சோ வழக்கின் தீர்ப்பில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து பேருந்து கண்ணாடிகளை உடைந்த வழக்கை நேற்று (ஜூன் 29) தேனி மாவட்ட அமர்வு நீதிபதி அப்துல்காதர் காணொலி காட்சி மூலம் நடத்தினார். அதில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10,500 அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார். மேலும், ஆயுள் தண்டனை முடிந்தவுடன் குற்றவாளி இந்த 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:விஷம் வைத்து மூன்று பேரை கொன்றவருக்கு மூன்று ஆயுள் தண்டனை