தேனி:இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம், மாமன்னன். இந்தத் திரைப்படம் வருகின்ற 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. திரைத் துறையில் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமாக இது இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மாமன்னன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், ”மாமன்னன் படம் உருவாக காரணம் தேவர் மகன் படம் தான். அந்த படத்தைப் பார்த்தபோது எனக்கு நிறைய வலி, மனப்பிறழ்வு, பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்து உணர்வுகளும் ஏற்பட்டன.
படம் பார்த்த பின்னர் அந்த நாளை என்னால் கடந்து போக முடியவில்லை. அந்தப் படத்தை எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. தேவர் மகன் படத்தில் வடிவேலு நடித்த இசக்கி கதாபாத்திரம் தான் இப்படத்தில் 'மாமன்னன்'. இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப் படம்' எனக் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் பற்றி இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்தன.