விமான விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது தேனி: அருணாசலபிரதேசத்தின் வெஸ்ட் காமெங் மாவட்டத்தில் அமைந்திருக்கும் தேஷ்பூர் மிசாமரி ராணுவ முகாமிலிருந்து ராணுவ பணி நிமித்தமாக சீட்டா என்ற ராணுவ ஹெலிகாப்டரில் மார்ச் 16 ஆம் தேதி காலை லெப்டினன்ட் கர்னல் வினய் பானு ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த ஹெலிகாப்டரின் ரேடார் சிக்னல் காலை 9.15 மணியளவில் துண்டிக்கப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்திய ராணுவம், சேவைகள் வாரியப் படை, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் அருணாசலப்பிரதேச காவல் துறையினர் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து வெஸ்ட் காமெங் மாவட்டத்திற்கு உட்பட்ட டிர்ராங் அருகிலுள்ள மண்டாலா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகியிருந்தது கண்டறியப்பட்டது. இந்த விபத்தில் இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் ஜெயந்த்தின் உடல் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரரின் உடல் விமான நிலைய இயக்குனரகம் முன்பு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி விஜய் ஆனந்த், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின் ஜெயந்த்தின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அதிகாலை 5:30 மணி அளவில், அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஜெயந்த்தின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் சஜீவனா, ராணுவ அதிகாரிகள் மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஜெயந்த்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்த மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவிக்கான காசோலையை ஜெயந்த்தின் மனைவியிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். பின்னர் மலர்களால் அலங்கரித்த வாகனத்தில் ஜெயந்த்தின் உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேஜர் ஜெயந்த்தின் உடல் ஜெயமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட இடுகாடுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஜெயந்த்தின் உடலுக்கு ராணுவ வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் ஜெயந்த்தின் உடலை சுமந்து கொண்டு தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்த பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மதுரை வந்தடைந்த மேஜர் ஜெயந்த் உடல்; சொந்த ஊரில் தகனம்!