மாஜிஸ்திரேட் நேரில் சென்று விசாரணை தேனி:வனத்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த விவசாயி ஈஸ்வரன் உடல் வைக்கப்பட்டுள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூராய்வு கூடத்தில் மாஜிஸ்திரேட் ராமநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் வண்ணத்திப்பாறை பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். தோட்ட வேலைக்காக சென்ற அவர், அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த கூடலூர் வனத்துறையினர், ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இதையும் படிங்க: தேனியில் தோட்ட வேலைக்குச் சென்றவரை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் - உறவினர்கள் சாலை மறியல்!
இந்நிலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த விவசாயி ஈஸ்வரனின் சடலம், உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தேனி மாவட்டத்தை பரபரப்பாக்கிய நிலையில், தற்போது உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராமநாதன், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உடற்கூராய்வு கூடத்திற்கு வந்துள்ளார்.
உயிரிழந்த ஈஸ்வரனின் உடலை பார்வையிட்ட அவர் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் அவருடன் ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி ராமலிங்கம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். இறந்த விவசாயி ஈஸ்வரனின் மனைவி, மகள் உள்ளிட்ட உறவினர்கள் சிலர் உடற்கூராய்வு கூடத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விசாரணைக்கு பின்னர் இன்றே உடற்கூராய்வு செய்யப்படும் என்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலசங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவகாரம்; மண் அள்ளி தூற்றி விவசாயிகள் நூதன போராட்டம்!