தமிழ்நாடு முழுவதும் ‘வியூகம் 2021’ என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டத்திற்கு இன்று (டிச.14) வருகை தந்த அவருக்கு ஆண்டிபட்டி அருகே பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மகளிரணி மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “பல வேலைகளை திறன்பட செய்யும் திறன் படைத்தவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். அம்மா, தங்கை, மனைவி, பாட்டி, தோழி என நம் வாழ்வில் எத்தனையோ பாத்திரங்களில் பங்கு பெறுகிறார்கள். மேம்படுத்துகிறார்கள். பெண்களை நான் தனித்திறன் படைத்த சாதனையாளர்களாக பார்க்கிறேன். இது போன்ற சாதனையாளர்களுக்கு பொதுவான பெயர் அம்மா என்று கூறுவார்கள். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று நான் கூறியபோது கேலி செய்து கொக்கரித்தார்கள். ஆனால் மேலை நாடுகளில் இது குறித்து இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள்தான் அதனை கண்டுபிடித்தோம் என சொல்லவில்லை. உலகத்தில் உள்ள தாயை வழிபடும் நேர்மையான ஆண்கள் எல்லாம் இதைப்பற்றி யோசித்திருக்கிறார்கள், நாங்கள் அதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் அதனை செயல்படுத்தும்.
கடந்த 1957ஆம் ஆண்டில் காமராஜர் ஆட்சியில் லூர்தம்மாள் சைமன் என்ற பெண் அமைச்சர் சிறப்பாக செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து, 63 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது வெறும் 4 பெண் அமைச்சர்கள்தான் பதவியில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 3.1 கோடி ஆண் வாக்காளர்களும், 3.9 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை பெண்கள்தான் முடிவு செய்கிறார்கள். பெண்கள் நினைத்தால் ஆட்சி மாறும். மக்கள் நீதி மய்யம் பெண்களுக்கு சம பங்கு அளிக்கும். குறைந்தது 20 பெண் அமைச்சர்களாவது பதவி வகிப்பார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறோம்.