கரோனா தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் வெளி நாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி, மேலும் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துக்குமார்(32) என்பவரை தேனி காவலன் செயலியின் மூலம் கண்காணிக்கப்பட்டதில், அவர் வீட்டிலிருந்து 2.5 கி.மீ (2,473மீ) தூரம் வரை வெளியில் சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு அறிவுரைகளை மீறி நோய் பரப்பும் விதமாக வெளியில் சுற்றித் திரிந்ததற்காக அவர் மீது சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.