தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள எட்டு ஒன்றியங்களுக்கான தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
இவற்றில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக -7, பாஜக -1, திமுக -2 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதிவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒன்றாவது வார்டு உறுப்பினர் போடி பிரீத்தா என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய மூன்று ஒன்றியங்களை அதிமுகவும், கம்பத்தில் பாஜகவும், தேனி ஒன்றியத்தை திமுகவும் கைப்பற்றியுள்ளது. பெரியகுளம், சின்னமனூர் , கடமலை - மயிலை ஆகிய மூன்று ஒன்றியங்களில் நடைபெறவிருந்த மறைமுகத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
16 உறுப்பினர்களைக் கொண்ட பெரியகுளம் ஒன்றியத்தில் அதிமுக -6, தேமுதிக -1, திமுக - 8, மற்றும் அமமுக -1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுக உறுப்பினர் செல்வம் என்பவர் அதிமுகவில் இணைந்ததால் அதிமுகவின் பலம் அதிகரித்து, திமுக பலம் சரிந்தது. இந்நிலையில் நடைபெறவிருந்த தலைவர் பதவிக்கான தேர்தலில் பங்கேற்க பெரும்பான்மையான உறுப்பினர்கள் வருகை தராததால் பெரியகுளம் ஒன்றியத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.