தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்று ஜனவரி இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி விபரம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 11ஆம் தேதி மாவட்ட ஊராட்சி, ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது.
இவற்றில் ஒரு சில இடங்களில் போதிய உறுப்பினர்களின் வருகை இல்லாததால் ஜனவரி 30ஆம் தேதியன்று மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேனி மாவட்டத்தில் ஜனவரி 11ஆம் தேதி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், தேனி, போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கான தலைவர், துணைத் தலைவர் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெரியகுளம், சின்னமனூர், கடமலை ஆகிய மூன்று ஒன்றியங்களில் போதிய உறுப்பினர்களின் வருகை இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டது. 16 உறுப்பினர்களைக் கொண்ட பெரியகுளம் ஒன்றியத்தில் அதிமுக ஆறு இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும், திமுக எட்டு இடங்களிலும், அமமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு ஆனால் திமுக உறுப்பினர் செல்வம் என்பவர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததால் திமுகவின் பலம் சரிந்தது. இதனால் இரு கட்சிகளும் சமபலம் பெற்றிருந்தது. இதேபோல் 10 உறுப்பினர்களைக் கொண்ட சின்னமனூர் ஒன்றியத்தில் திமுக ஆறு இடங்களிலும், அதிமுக நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன. ஒன்றாவது வார்டு திமுக உறுப்பினர் ஜெயந்தி சிவக்குமார், அதிமுகவில் இணைந்ததால் அந்த ஒன்றியத்திலும் இரு கட்சிகளின் பலம் சமமாக இருந்தது. கடமலை திமுக -7, அதிமுக -7 என இரு கட்சிகளும் வெற்றி பெற்றிருந்ததால் அங்கும் சம பலமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், பெரியகுளம், சின்னமனூர், கடமலை ஆகிய மூன்று ஒன்றியங்களில் இரண்டாவது முறையாக நடைபெற்ற மறைமுகத் தேர்தலிலும் திமுக, அதிமுக உறுப்பினர்களின் வருகை இல்லாததால் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. காலையில் தொடங்கிய மறைமுகத் தேர்தலுக்கு திமுக, அதிமுக உறுப்பினர்களின் வருகை இல்லாததால் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்தனர்.
இதையும் படிங்க: அரசு நீட் பயிற்சி மையங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைவு