நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசின் பிடிவாதம் மட்டும் குறைந்தபாடில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கனவுகளுக்கு இடையூறாக இருக்கும் இந்தத் தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக அவர்களுக்குத் தன் மகன் படித்த புத்தகங்களை வாசிப்பதற்காகப் பரிசளிக்கிறார் தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்.
பொதுவாக ஒருவர் புதிதாக டீக்கடை துவக்கினால் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக டீயின் சுவை, தரத்தில் தான் கவனம் செலுத்துவர். ஆனால் ராஜேந்திரனின் 'கலாம் நூலக யுக்தி' அருவி டீக்கடைக்கு மேலும் வலுசேர்க்கிறது என்றே சொல்லலாம். அரசியல், அக்கம் பக்கத்து புறணி என நிறைந்திருக்கும் டீக்கடையின் தோற்றத்தையே அமைதியின் உறைவிடமாய் மாற்றிய இவரின் முயற்சி குறித்து கேட்டோம்.
அப்போது பேசிய அவர், "மகனின் படிப்பிற்காக வாங்கிய புத்தகங்களை வீட்டில் சேமித்து வைத்திருந்தேன். அவற்றையெல்லாம் அப்புறப்படுத்த மனமின்றி நூலகமாக மாற்றியுள்ளோம். அவ்வளவு தான். இதற்காக தனியாக இடம் பார்க்காமல் புதிதாக துவங்கும் டீக்கடையையே நூலகமாக அமைக்கலாம் என தீர்மானிக்கையில் உருவானது தான் "கலாம் மாணவர்கள் நூலகம்".
துவக்கத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், பொது அறிவுப் புத்தகங்கள் உள்ளிட்ட புத்தகங்களை வைத்திருந்தோம். இதனை அறிந்த திண்ணை பயிற்சி மையம் எனும் தன்னார்வ அமைப்பினர், டிஎன்பிஎஸ்சி., யுபிஎஸ்சி., போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் பயனடையும் வகையில் புத்தகங்களை வழங்கினர்.
இதனால் வாசகர்களின் வருகையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாணவர்கள் தங்களது ஆதார், மொபைல் எண் விபரங்களை மட்டும் தெரிவித்து தேவையான புத்தகங்களை இலவசமாக வீட்டிற்கே எடுத்துச் சென்று படிக்கலாம். இதற்காக எந்தவொரு கட்டணமும் வசூல் செய்வதில்லை. வரும் காலங்களில் வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக சிறுகதை, நாவல், இலக்கியம், உள்ளிட்ட நூல்களையும் வரிசைப்படுத்த உள்ளோம்" என்று பெருமையுடன் கூறுகிறார்.