தேனி: கீழ கூடலூர் எல்லைத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டி தேவர் மகன் தங்கம் (52). கூலித் தொழிலாளியான இவர், கம்பம் வடக்குப்பட்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், இன்று (ஜன.01) காலை இருசக்கர வாகனத்தில் காந்தி சிலை பகுதியில் இருந்து வீட்டிற்கு கம்பம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கம்பம் அரசமரம் அருகே அதே திசையில் அவருக்குப் பின்னால், குமுளியில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாகத் தங்கம் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தங்கம் உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்த கம்பம் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக உயிரிழந்த தங்கத்தின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காகக் கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அரசு பேருந்தை ஓட்டி வந்த ஆண்டிபட்டி தாலுகா கன்னிப்பிள்ளைபட்டி பகுதியைச் சேர்ந்த மணி முத்து மகன் கார்த்திக் ராஜா (38) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், புத்தாண்டு நாளில் கூலித் தொழிலாளி சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:நடிகர் விஜயின் அலுவலக கணக்காளர் பாலியல் புகாரில் கைது.. நடந்தது என்ன?