தேனி: அம்மாபட்டியில் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் சார்பில் 110 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டடத்தில் குறவர் சமுதாய மக்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும் என தேனி ஆட்சியரிடம் கடந்த மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பின்னர் குறவர் சமுதாய மக்களுக்கு 55 வீடுகளும், நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு 55 வீடுகளும் வழங்கப்படுவதாக ஆட்சியர் உறுதியளித்தார்.
இந்நிலையில் வீடுகள் கட்டுமான பணிகள் முடிவு பெற்ற நிலையில் ஆட்சியர் உறுதியளித்தபடி குறவர் சமுதாய மக்களுக்கு வீடுகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. இதனையடுத்து தேனி ஆட்சியர் அலுவலகத்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு, வேங்கை கட்சி சார்பாக பழங்குடியினர் மற்றும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறி அடுப்பை வைத்து சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக காவல் துறையினர் அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது குறவர் பழங்குடியின மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் குறவர் பழங்குடியின மக்களை காவல் துறையினர் ஒருமையில் திட்டி எங்களை அடித்து துன்புறுத்தியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
பின்னர் ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக அலுவலகம் உள்ளே சென்ற குறவர் சமுதாயத்தினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி ஒரு சிலரை மட்டும் மனு அளிக்க உள்ளே அனுமதித்தனர். குறவர் சமுதாயத்தினர் ஆட்சியரிடம் எங்கள் சமுதாய மக்களுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டி கோரிக்கை மனுவை அளித்துவிட்டுச் சென்றனர்.