தேனி: தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட குரங்கணி காட்டுத்தீ சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் மாதம் 10ஆம் தேதி ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலிருந்து 12 பேர் கொண்ட ஒரு குழுவும், சென்னையிலிருந்து வந்த 24 பேர் கொண்ட மலையேற்றக்குழுவினரும், தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றனர்.
குரங்கணி - கொழுக்குமலை அருகே மார்ச் 11ஆம் தேதியன்று ஏற்பட்ட காட்டுத்தீயில், ட்ரெக்கிங் சென்ற 36 பேரும் சிக்கிக் கொண்டனர். இதில் 23 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் வனத்துறையினரின் அனுமதி இன்றி ட்ரெக்கிங் சென்றதாக மலையேற்றக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் குரங்கணி மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் மனதில் ஆறாத வடுவாக மாறிவிட்டது. இந்த சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது. குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தின் 5ஆம் ஆண்டு நினைவுநாள், நாளை (மார்ச் 11) அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குரங்கணி காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் முதன்மை செயலாளராக இருந்த அதுல்ய மிஸ்ரா தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், அதில் விபத்துக்கு காரணத்தை குறிப்பிடவில்லை என்ற என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது? இதில் தவறிழைத்து யார்? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "36 நபர்கள் கொண்ட குழு மலையேற்றப் பயிற்சிக்காக வந்தபோது, கடுமையான காட்டுத்தீயின் சுழலில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பத்து பேர் சிறு காயங்களுடன் வீடு திரும்பினர். 14 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் நீண்ட நாள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதனையடுத்து தமிழக அரசு அதுல்ய மிஸ்ரா தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழுவை அமைத்தது. இந்தக்குழு தீவிர விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பதை அறிவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தேன். இந்த சம்பவத்தின்போது விடுமுறையில் இருந்த மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உடனடியாக தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு, சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக வந்து தனது பணியை துரிதப்படுத்தினார்.
இச்சம்பவத்தில் வனத்துறையும், காவல்துறையும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்போடு மிகுந்த அக்கறையுடன் பணியாற்றினார்கள். பல நபர்களைக் காப்பாற்றியதில் இவர்களின் பங்கு அளப்பரியது. ஆனால், தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக்குழுவின் அறிக்கை பெருத்த ஏமாற்றமளிக்கிறது. சம்பவத்திற்கு காரணமானவர்களை சுட்டிக்காட்டத் தவறி, இனிமேல் இதுபோன்ற சுற்றுலாக்களை எப்படி நடத்த வேண்டும் என்ற ஆலோசனையை மட்டுமே தனது இறுதிப் பரிந்துரையாக வழங்கியுள்ளது. இதனை எப்படி ஏற்பது? பாதுகாக்கப்பட்ட இந்த வனப் பகுதியில் சுள்ளி பொறுக்கச் செல்லும் பெண்களையோ ஆண்களையோ உடனடியாக வெளியேற்றும் வனத்துறை, 36 நபர்களை மூன்று நாட்கள் எவ்வாறு அனுமதித்தது? என்கிற கேள்விகளுக்கெல்லாம் இதுவரை விடை இல்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: தருமபுரியில் தாயை இழந்து தவிக்கும் யானை குட்டிகள்.. வனத்துறை எடுத்துள்ள புதிய முயற்சி!