தேனி: சின்னமனூர் அருகே, குச்சனூர் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழா ஜூலை 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான சனி பகவான், சுயம்பு வடிவில் மூலவராகக் காட்சி தருவாதலும், திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற கோயிலாக குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்த சனீஸ்வர பகவான் கோயிலில் ஒவ்வொரு ஆடி சனிக்கிழமைகளிலும் கோலாகலமாக திருவிழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி கடந்த சனிக்கிழமை (ஜூலை 22) ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இக்கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோயில் பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், பலர் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு தரமானதாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதை அறிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். டீக்கடை, ஹோட்டல், பழக்கடை உள்ளிட்டப் பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.