இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று (அக். 19) காலை 10 மணியளவில் தேனி - போடி சாலையில் நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு வருகிற காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் தடுத்துவருகின்றனர்.
அதுமட்டுமின்றி காங்கிரஸ் கொடியுள்ள வாகனங்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. டிராக்டர்களிலும் விவசாயிகள் வர முடியவில்லை. விவசாயிகள் கூட்டத்தை நடைபெறாமல் தடுப்பதற்கு காவல் துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய ஜனநாயக சட்டவிரோத செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி கூட்டத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என்று காவல் துறையினரை எச்சரிக்கிறேன்.