கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திற்குத் தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய மலைச்சாலையே முக்கிய போக்குவரத்தாகும். இது தவிர சாக்குலூத்து மெட்டு, ராமக்கல் மெட்டு, தேவாரம் மெட்டு, குரங்கணி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மலைப்பாதையில் நடைபயணமாகவும் சிலர் சென்று வருவர்.
தற்போது ஊரடங்கு உத்தரவால் மாநில எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட மலைப்பாதையில், சிலர் கேரளாவிற்குச் சென்று வருவதை அம்மாநில காவல் துறையினர் கண்காணித்து அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து மலைப்பாதை வழியாக கேரளாவிற்குள் நுழைந்த 30க்கும் மேற்பட்ட தமிழர்களை அம்மாநில காவல் துறையினர் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைத்துள்ளனர். மூணாறு, கட்டப்பனா உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடங்களில், தங்க வைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.