தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் தலைதூக்கும் முல்லைப்பெரியாறு விவகாரம் - Kerala's actions against Tamil Nadu

35 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்குப்பின் 2014ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக வதந்திகளை பரப்பி மீண்டும் சீண்டுகிறது.

மீண்டும் தலைதூக்கும் முல்லைப்பெரியாறு விவகாரம்
மீண்டும் தலைதூக்கும் முல்லைப்பெரியாறு விவகாரம்

By

Published : Aug 23, 2020, 9:42 PM IST

Updated : Aug 23, 2020, 10:52 PM IST

பொய்த்துப்போன பருவமழை, பொருளாதார சுரண்டல், பெரும்பஞ்சம், பட்டினிச்சாவு என 1876இல் அழிவின் பிடியில் தமிழ்நாடு இருந்தது. அதுவும் குறிப்பாக, தென் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட காலகட்டம் அது. இதனால் விழி பிதுங்கி நின்ற அப்போதைய பிரிட்டிஷ் அரசு, பிரச்னைகளைத் தீர்க்க நீர்நிலைகளை அதிகரிக்க முடிவு செய்து அதற்கான நிதியையும் ஒதுக்கியது.

இதன் விளைவும், பென்னிகுயிக்கின் உந்துதலும்தான் முல்லைப் பெரியாறு அணை உருவான வரலாற்றுக்கு வித்திட்டது. 1887இல் அணை கட்டுமானப் பணிகள் தொடங்கி, பல கட்ட போராட்டங்களுக்குப்பிறகு 1895 அக்டோபர் 10இல் முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டது. ஆனால், முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு இராமநாதபுரம் சேதுபதி மன்னர் காலத்திலேருந்தே (1798) திட்டமிடப்பட்டு, அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தலைதூக்கும் முல்லைப்பெரியாறு விவகாரம்

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உற்பத்தியாகி, கேரள - இடுக்கி மாவட்டம் வழியாக, அரபிக்கடலில் வீணாக கலக்கும் பெரியாற்று நீரை முல்லை ஆற்றோடு இணைத்து இரு மலைகளுக்கு இடையே முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பெருமை பென்னிகுயிக்கையே சாரும். முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் தேவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அணையை, காலப்போக்கில் கேரள அரசு தனதாக்கிக் கொண்டது.

தொழில் நுட்பங்களும் செயற்கைக்கோள்களும் இல்லாத காலத்தில் பென்னிகுயிக் கட்டிய இந்த அணை பொறியியல் துறையின் அதிசயமாகவே கருதப்படுகிறது. ஒற்றை அணையால் ஐந்து மாவட்ட மக்களின் பஞ்சம் தீர்ந்தது. ஆனால், கேரள அரசின் பொய்ப் பரப்புரைகள் தீரவில்லை. அணை பலவீனமாக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் இடிந்து விடும் என்றும் கேரள அரசு பரப்பும் வதந்திகளின் ஒற்றைக் குறிக்கோள் அணையை மொத்தமாக சுரண்டுவதே...

மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் சோகன் ராய்

35 ஆண்டு கால சட்டப் போராட்டம்:

1979ஆம் ஆண்டு 155 அடியாக இருந்த அணையின் நீர் மட்டத்தை கேரள அரசு 136 அடியாக குறைத்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு அணையை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும் பேபி அணையைப் பலப்படுத்திய பின் நீர்மட்டத்தை 152 அடிக்குத் தேக்கிக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை ஏற்க மறுத்த கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயம் செய்து, புதிய சட்டம் இயற்றியது. கேரள அரசின் இந்த செயலை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

2010ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டனர். 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 25இல் அணையின் உறுதித் தன்மை குறித்து அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. 2014 மே 7ஆம் தேதி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

டேம் 999 - போஸ்டர்

மலையாளிகள் சிலரின் அற்பச் செயல்:

இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர் குழு, அணை பலம் வாய்ந்தது என சான்றளித்த பின்னரும் ஒரு சில மலையாளிகளின் அற்பச் செயல் இரு மாநில ஒற்றுமைக்குப் பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 2011ஆம் ஆண்டு மலையாளத் திரைப்பட தயாரிப்பாளரான சோகன் ராய், டேம் 999 என்கிற ஆவணப் படத்தை எடுத்து, அணை உடைவது போன்ற காட்சிகளை உருவாக்கி கேரளாவை கொந்தளிக்க வைத்தார்.

இதே போன்று தற்போது மலையாளத் திரைப்பட இயக்குநர் ஜி.எஸ்.பிரதீப், அணை பலவீனமாகி விட்டதாகவும் அதற்கு மாற்றாக ஆர்ச் வடிவிலான புதிய அணை கட்டப்பட்டது போன்றும், 3டி அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளார். இது குறித்து பேசிய முல்லைப் பெரியாறு அணை மீட்புக் குழுத் தலைவர் ரஞ்சித்குமார், "இரு மாநில ஒற்றுமைக்கு பிளவு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து மலையாளிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மலையாளத் திரைப்பட இயக்குநர் ஜி.எஸ்.பிரதீப்

மீண்டும் தலைதூக்கும் முல்லைப் பெரியாறு விவகாரம்:

இதனிடையே அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்க வேண்டும் என மலையாள வழக்கறிஞர் ஜோய் என்பவர், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 24அன்று விசாரணைக்கு வர உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் நீர்மட்டத்தை 130 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என வழக்கறிஞர் ஜோய் மனு தாக்கல் செய்திருப்பது தமிழ்நாடு விவசாயிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய 5 மாவட்ட பெரியார் - வைகை பாசன பரப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், "பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்வதற்கு உச்சநீதிமன்றம், அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கிய பிறகு, வழக்கறிஞராக இருந்து கொண்டு இது போன்று வழக்குத் தொடர்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதனை கேரள அரசு கண்டிக்க வேண்டும்.

வழக்கறிஞர் ஜோய்

மேலும் ஆகஸ்ட் 24ஆம் தேதி தனது பதில் மனுவை தாக்கல் செய்ய இருக்கும் தமிழ்நாடு அரசு தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட பெரியாறு - வைகை பாசன பரப்பு விவசாயிகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும். தேவைப்பட்டால் 5 மாவட்ட விவசாயிகள் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். வழக்கறிஞர் ஜோய் போன்று ஆயிரம் பேர் வந்தாலும் அதனை எதிர்கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் உரிமையைப் மீட்டெடுப்போம்" என்றார்.

இன்னும் பல இடர்பாடுகள்:

கடந்த 2000ஆம் ஆண்டில் மின்கம்பி உரசி அணைப் பகுதியில் யானை உயிரிழந்தது. இதையடுத்து, அணைப் பகுதிக்கு செல்லும் மின் இணைப்பை கேரள வனத் துறை துண்டித்தது. இதனால் இரவு மற்றும் மழைக் காலங்களின்போது அணைப் பொறியாளா்கள், ஊழியா்கள் சிரமமடைந்தனா். மின்இணைப்பால் வன விலங்குகளுக்குப் பாதிப்பு வராமல் இருக்க யு.ஜி.சி. எனும் தரைவழி மின் இணைப்புக் கொடுக்க திட்டம் தயாரித்து, கேரள மின்சார வாரியத்திடம் மின் இணைப்புக்கான தொகை ரூ.1.65 கோடியை பொதுப்பணித்துறை செலுத்தி பல ஆண்டுகளாகியும் கேரள அரசு மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது. மேலும் அணையின் குடிமராமத்துப் பணிகளுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறையினரை கேரள அரசு அனுமதிப்பதில்லை.

35 ஆண்டு கால சட்டப் போராட்டம் ஓரளவு நிறைவடைந்த நிலையில், ஒருபுறம் புதிதாக அணை கட்டப்படுவது போன்ற அனிமேஷன் வீடியோ, மறுபுறம் அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதால், 2011ஆம் ஆண்டு போன்று தேனி மாவட்டம் மீண்டும் போராட்டக் களமாக மாறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை...!

இதையும் படிங்க: 'நாலு வருஷமா ஒருபோகம்.. இந்த வருஷம் அதுவும் இல்ல' முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் கவலை!

Last Updated : Aug 23, 2020, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details