பொள்ளாச்சி:தமிழ்நாடு - கேரளா என இரு மாநிலங்களையும் பாதிக்கும் ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சித்தூர் அருகே உள்ள அணிக்கோடு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகத்தை அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வி.டி. சதீசன் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கான அரசாங்கமாக செயல்படவில்லை. மக்களுக்கு விரோதமான அரசாகவே செயல்படுகிறது. கேரள மாநிலத்தில் போதைப் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக விரோத செயல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மக்களை வெகுவாக பாதிக்கும் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளுக்கான உதிரிபாகங்கள் வாங்க கூட முடியாத நிலையில் உள்ளன.
அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இல்லை. மாநிலத்தின் பெரும் பகுதியிலும் தரமான ரோடுகள் இல்லை. எங்கும் குண்டும் குழியுமாக உள்ளன. தங்கக்கட்டி பிஸ்கட் வழக்கில் இருந்து திசை திருப்புவதற்காக முதலமைச்சர் பினராயி விஜயன் புதிய பிரச்சினைகளை உருவாக்குகிறார். காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களின் நலனுக்காகவே போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.