தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கிராமங்களான காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டிலேயே ஆண்டுதோறும் திராட்சை பழம் கிடைக்கும் இடமாக 'கம்பம் பள்ளத்தாக்கு' பகுதி விளங்குகிறது. இங்கு விளையும் பன்னீர் திராட்சை மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதுதவிர கேரள மாநிலத்திற்கும் அதிக அளவில் அனுப்பப்படுகிறது.
தற்போது கம்பம் பள்ளத்தாக்குப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் பன்னீர் திராட்சை நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்குப்பகுதியில் ஒரு கிலோ பன்னீர் திராட்சை ரூ.65 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கறுப்பு பன்னீர் திராட்சை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.