மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் மாநில அளவிலான பெண்களுக்கான கோ - கோ போட்டிகள் நடைபெற்றன.
பெரியகுளம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை, கோவை, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 24 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அணிகள் பங்கேற்றன.
நாக் - அவுட் முறையில் நேற்றும் (பிப். 21), இன்றும் (பிப். 22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிவகங்கை, தேனி அணிகள் மோதியதில், சிவகங்கை அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில், போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுப் கோப்பைகள், பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
முன்னதாக பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், "இன்றைக்கு ராமர் - லட்சுமணரைப் போல முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும் வெற்றி வாகை சூடிவருகின்றனர். இதில், யார் ராமர்? யார் லட்சுமணர் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. அவர்களுக்குள் இருக்கும் ரத்த உறவை, ஒற்றுமை உறவைத்தான் பார்க்கிறோம்.
எங்களைப் பொறுத்தவரை இருவருமே ராமர்தான், இருவருமே லட்சுமணர்தான். இருவரும் அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வருகிற 28ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி, தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரி-வைகை-குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நதிநீர் இணைப்புத் திட்டம் இன்றைக்கு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை நாங்கள் அடிக்கல் நாட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.
இதனை வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், வீராணம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர்கள் (திமுக ஆட்சியில்), அதனை வீணான திட்டம் எனக் கைவிட்டனர். அதனை நடைமுறைப்படுத்தி இன்றைக்கு சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்து சாதித்துக் காட்டியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு அதேபோல வீணான திட்டம் என அவர்களால் கைவிடப்பட்ட காவிரி-வைகை-குண்டாறு ஆகிய நதிகளை இணைத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சாதித்துக் காட்டுவார்கள்" என்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பலமுறை விளக்கம் அளித்துள்ளார். அதற்குமேல் சொல்வதற்கு எனக்குத் தகுதியில்லை. மேலும் தனக்கு விடியல் இல்லையென மு.க. ஸ்டாலின் தேடி அழைகிறார்.
அதுவும் அவரது அப்பா கருணாநிதி காலத்தில் இருந்து தேடி அழைகிறார். அது (விடியல்) எப்போதும் மு.க. ஸ்டாலினுக்கு கிடைக்காது. 20 ஆண்டுகளாக ஜெனரேட்டரில் ஒளி கிடைத்த முல்லைப்பெரியாறு அணைக்கு தற்போது மின்சாரத்தில் ஒளி கிடைக்கிறது" எனக் கூறினார்.
இதனிடையே உடனிருந்த தேனி எம்.பி. ஓபிஆர், அவர் (மு.க. ஸ்டாலின்) வந்தால் தமிழ்நாட்டு மக்கள் மீது இடிதான் விழும் என்று நக்கலடித்ததால் அங்கு அமைச்சர் உள்பட அனைவரிடமும் சிரிப்பொலி எழுந்தது.
இதையும் படிங்க:தேர்தல் பரப்புரைக்காக முதலமைச்சர் தென்காசி வருகை: அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆய்வு