வனத்துறையினரால் சுட்டப்பட்டு உயிரிழந்த ஈஸ்வரனின் சகோதரர் எஸ்பி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் தேனி: கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரனை, கடந்த 28ஆம் தேதி மேகமலை வனப்பகுதிக்கு உட்பட்ட வண்ணாத்திபாறை வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து விலங்குகளை வேட்டையாட முயன்றதாகக் கூறி வனத்துறையினர் பிடிக்க முயன்றனர்.
அப்போது வன அலுவலர்களைக் கத்தியை காட்டி மிரட்டியதாகக் கூறி வனத்துறையினர் ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் உயிரிழந்தார். இச்சம்பவம் தேனி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உயிரிழந்த ஈஸ்வரன் குடும்பத்தினர் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கோரிக்கை விடுத்து மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் உயிரிழந்த ஈஸ்வரனின் சகோதரர் சேகரிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, இன்று (நவ. 24) காலை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஈஸ்வரனின் சகோதரர் சேகர் நேரில் ஆஜரானார். சேகரிடம் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் வாக்குமூலம் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து சேகர் கூறுகையில், "நானும் எனது தம்பி ஈஸ்வரனும் (துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தவர்) தோட்ட வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்று இருந்தோம். அப்போது டவர் பகுதியில் இருவரும் அமர்ந்திருந்த போது வனத்துறையினர் பென்னி மற்றும் வன அலுவலர்கள் ஈஸ்வரனை மாலை 6.30 மணி அளவில் "வா ஈஸ்வரா" என அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்றனர்.
பின்னர் நான் எனது தோட்ட பகுதிக்குச் சென்று தோட்ட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்போது 8 மணி அளவில் வெடி சத்தம் கேட்டது. அதன்பின், காலை வீட்டிற்கு வரும்போது தான் ஈஸ்வரனை வனத்துறையினர் சுட்டது தெரியவந்தது" எனக் கூறினார். பின்னர், வழக்கறிஞர் சங்கிலி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "உயிரிழந்த ஈஸ்வரனின் உடன் பிறந்த சகோதரர் வாக்குமூலத்தை பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி, இன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதியும், தர்மமும் வெல்ல வேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் படி இன்று வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்துள்ளோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:பிபிஎல் தொடரில் இருந்துஆப்கான் நட்சத்திரம் ரசித் கான் விலகல்.. என்ன காரணம் தெரியுமா?