தேனி: கர்நாடக மாநிலம், மங்களூரு பகுதியில் நேற்று முன்தினம் (நவ.19) மாலை ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது.
மேலும் இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர், பயணி ஆகியோர் பலத்த காயம் அடைத்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முதல் தேனி மாவட்டத்தின் தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான குமுளி, போடி மற்றும் கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் தமிழ்நாடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய சோதனைச்சாவடிகளில் போலீசார் கேரளாவிலிருந்து தமிழ்நாடு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர். சபரிமலை ஐய்யப்பன் கோயில் சீசன் தொடங்கி உள்ள நிலையில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு தமிழ்நாடு வழியாக செல்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடு காரணமாக குறைந்த அளவே பக்தர்கள் வந்தனர். இதனால் நடைதிறந்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். இதனை அடுத்து காவல் துறையினர் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவிகள் கொண்டு தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்கள் அனைத்தையும் பரிசோதனை செய்கின்றனர்.
மேலும் சந்தேகப்படும்படி உள்ள நபர்களிடம் அவர்களது ஆவணங்கள் முழுவதையும் பரிசோதனை செய்கின்றனர். இதனைத்தொடர்ந்து கேரள மாநில போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநில வெடிப்பு எதிரொலி: தமிழ்நாடு எல்லையில் தீவிர சோதனை! இதையும் படிங்க: கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு