தேனி: பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு வீட்டில் திருட முயன்ற நபரைப் பிடித்த பொதுமக்கள், அவரை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் காவல் ஆய்வாளர் மதனகலா விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் பிடிபட்ட நபர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(31) என்றும், பால் வியாபாரியின் இருசக்கர வாகனத்தைத் திருடியவர் என்பதும் தெரியவந்தது.
அப்போது ராதாகிருஷ்ணன், தூய தமிழில் கவிதை நடையிலும், ஆங்கிலத்திலும் வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னை நடிகர் அஜித்குமார் ரசிகர் என்று அறிமுகம் செய்துகொண்டு, அவர் அளித்த வாக்குமூலத்தைக் கேட்டு காவல்துறையினர் வயிறு குலுங்க சிரித்தனர். தொடர் விசாரணையில் அவர் கஞ்சா போதைக்கு அடிமையாகி, மனநலக் காப்பகத்தில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர் என்பது தெரிய வந்தது.
எழுந்த கடுமையான விமர்சனங்கள்
யாரேனும் சாவியுடன் நிறுத்தி வைத்திருக்கும் இருசக்கரவாகனத்தைத் திருடி ஓடிவிட்டு, எங்கேனும் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு செல்வதை பொழுதுபோக்காகவும் செய்து வந்துள்ளார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. சிரிப்பை வரவைத்த போதும், காவல்துறையினரின் நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து விசாரணை காணொலி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு, ஆய்வாளர் மதனகலாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நோட்டீஸ் அனுப்பினார்.
தற்போது திடீர் திருப்பமாக ஆய்வாளர் மதனகலாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. அன்பு இன்று (பிப்ரவரி 27) உத்தரவிட்டார். மனநலம் பாதிக்கப்பட்டவரின் விசாரணை காணொலியை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பெண் காவல் ஆய்வாளர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சேலத்தில் உலகிலேயே உயரமான முருகன் சிலை!