அரிக்கொம்பன் யானைக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவு தேனி: கேரள மாநிலம் சின்னக்கானல் பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் தங்களுடைய அரிக்கொம்பன் யானையைக் கேரளா வனத்துறை அமைச்சர் தமிழ்நாட்டுக்கு விற்று விட்டார் என்று குற்றம் சாட்டுகின்றனர். அரிக்கொம்பன் யானையை மீண்டும் தங்கள் பகுதிக்கே கொண்டு வருமாறு கேட்டு போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
தேயிலை தோட்டங்களில் வேலை பார்ப்பவர்களும், புதிதாக குடியேறியவர்களும் யானைகளை கண்டு அஞ்சினாலும், வனத்தையே நம்பி வாழும் பழங்குடி மக்கள் யானையை தங்களின் வாழ்வோடு இணைந்ததாகவே பார்க்கின்றனர். இதனால் அரிக்கொம்பன் யானையை மீண்டும் தங்கள் வாழ்விடத்திற்கே கொண்டு வந்துவிட வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு நடக்காத பட்சத்தில் எந்த கட்சியினருக்கும் ஓட்டுப் போட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களின் வாழ்வோடு இணைந்த அரிக்கொம்பன் யானையைத் தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக திரும்பப் பெறுமாறு கேரளா வனத்துறை அமைச்சரை வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் போராட்டம் என்றால் தமிழகத்தில் விநோதமாக யாகம் நடத்தி வழிபாடு செய்து வருகிறது சிவசேனா கட்சி. அக்கட்சி சார்பாக அதன் மாநிலச் செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் தேனியில் உள்ள வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவிலில் பூஜை நடைபெற்றது. கேரள மாநில நம்பூதிரிகளைக் கொண்டு மகா கணபதி யாகம் நடைபெற்றது. அரிக்கொம்பன் முழு உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என யாகத்தின் போது பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த பூஜைக்கு பின்னர் கோயிலில் இருந்தவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உலா வந்து கொண்டிருந்த அரிக்கொம்பன் காட்டு யானையை, அம்மாநில வனத்துறையினர் பிடித்து தமிழக கேரளா எல்லைப் பகுதியில் உள்ள பெரியார் புலிகள் வனப்பகுதியில் விட்டனர். அரிகொம்பன் யானை அங்கிருந்து தமிழகப் பகுதியான மேகமலை பகுதிக்குள் உலா வந்துகொண்டிருந்தது. அங்கிருந்து கடந்த மே 27 ஆம் தேதி கம்பம் நகர்ப் பகுதிக்குள் நுழைந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விரட்டியது.
பத்து நாட்களுக்கும் மேலாகக் கம்பம் பகுதிக்குள் சுற்றித்திரிந்த அரிகொம்பன் யானையால் பொதுமக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் தமிழக வனத்துறையினர் அரிகொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி மீண்டும் பிடித்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் இன்று (ஜூன் 06) அதிகாலையில் விடுவித்தனர்.
இதையும் படிங்க:கம்பத்தில் அரிக்கொம்பனுக்காக விதிக்கப்பட்ட 144 தடை வாபஸ்!