தேனியில் ரயில்வே சரக்கு போக்குவரத்து வசதி தேனி:தேனி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், தேனி ரயில் நிலையத்தில் பெரிய அளவில் சரக்குகளைக் கையாள புதிய ரயில்வே சரக்கு போக்குவரத்து வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இது மதுரை கோட்டத்தின் 19வது சரக்கு முனையமாகும். இந்த சரக்கு போக்குவரத்து அலுவலகம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே சரக்கு இயக்க தகவல் அமைப்பு (Freight Operations Information System - FOIS) என்ற மென்பொருள் வாயிலாக சரக்கு பெட்டிகளை பதிவு செய்தல், வாடிக்கையாளருக்கு சரக்கு பெட்டிகளை பதிவு மூப்பு அடிப்படையில் வழங்குதல், சரக்குகளை ஏற்றுவது இறக்குவது போன்ற தகவல்களை பதிவு செய்தல், வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை பெற்றுக் கொண்டதற்கு சாட்சியாக ரயில்வே ரசீது வழங்குதல், சரக்கு ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது போன்ற தகவல்களை அறிதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கணிப்பொறி வாயிலாக எளிமையாக செயல்படுத்த முடியும்.
இதையும் படிங்க:தேசிய தரச்சான்றிதழ் பெற அரசு வழங்கிய நிதியில் முறைகேடு..? - தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது என்ன?
சரக்கு அலுவலக ரயில் பாதை அருகே சரக்குகளை கையாள கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைக் காலங்களிலும் தங்கு தடை இன்றி சரக்குகளை கையாள முடியும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 42 சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலை கையாள முடியும் என்றும் தெரிவித்துள்ளது. சரக்கு போக்குவரத்திற்காக தனி ரயில் பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், பயணிகள் ரயில் போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி புதிதாக அமைந்துள்ள சரக்கு முனையத்தினால் வர்த்தக ரீதியாகவும் பெரிதளவில் லாபகரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதன் மூலம் ஏலக்காய், மிளகு மற்றும் தேயிலை உள்ளிட்ட பொருட்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.
சரக்கு ரயில் நிலைய நடைமேடை உள்பட பல்வேறு நவீன வசதிகள் 5 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரை - போடிநாயக்கனூர் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சரக்கு ரயில் பாதையும் விரைவில் மின்மயமாக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. இதன்படி, தேனியில் ரயில்வே நிலையத்தில் மதுரை கோட்டத்தின் 19வது சரக்கு முனையம் பயன்பாட்டிற்கு வந்தது.
இதையும் படிங்க:ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்..! நொடிப்பொழுதில் உயிரை காத்த காவலர்! வீடியோ வைரல்!