வடமாநிலத்திற்கு வேலைக்கு சென்ற பழங்குடியின சிறுவர்கள் மாயம் என ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார் தேனி மாவட்டம்: ஆண்டிபட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வேலப்பர் கோவில் கதிர்வேல்புரம் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த சீனி என்பவரின் மகன் பட்டவராண்டி (வயது 16), வேல் முருகன் என்பவரின் மகன் ஞானவேல் (வயது 15) மற்றும் ரவி என்பவரின் மகன் தமிழரசன் (வயது 14) ஆகிய மூன்று சிறுவர்கள் உள்ளனர்.
இவர்கள் மூவரையும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த காசி உள்ளிட்ட இரு நபர்கள் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதிக்கு இட்லி கடைக்கு வேலைக்கு அழைத்து செல்வதாகக் கூறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த மூன்று சிறுவர்களையும் அழைத்து சென்று உள்ளனர். அங்கு வேலைக்கு சென்ற மூன்று சிறுவர்களும், கடந்த ஆறு மாதங்களாக அவர்களது பெற்றோர்களிடம் தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்து உள்ளனர்.
இதையும் படிங்க:அரசுக்கு எதிராக பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்... ஏன் தெரியுமா?
இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு வேலைக்கு சென்ற சிறுவர்கள் மூன்று பேரும் அவர்களது பெற்றோர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலைக்காக அழைத்துச் சென்ற உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களிடம் சிறுவர்கள் குறித்த தகவல்களை பெற்றோர்கள் தொடர்பு கொண்டு கேட்டு உள்ளனர்.
அப்போது அந்த நபர்கள் “சிறுவர்கள் வேலையை விட்டு சென்று 10 நாட்களுக்கும் மேல் ஆகிறது, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியாது” என்று அலட்சியமாக பதில் கூறியதாக சிறுவர்களின் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பின், இது குறித்து அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் சிறுவர்களை பத்திரமாக மீட்டு தருமாறு அருகில் உள்ள ராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
ஆனால், இவர்கள் அளித்து உள்ள புகார் குறித்து போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு தர வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியரிடம் சிறுவர்களின் பெற்றோர் கண்ணீர் மல்க மனுக் கொடுத்த காட்சி காண்போர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் பழங்குடியின ஊர் பொது மக்கள் என பலர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை - லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல்!