அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் எமினென்ஸ் என்ற உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் துணைவேந்தரின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பெரியகுளத்தில் உள்ள அண்ணா சிலையிடம் மனு அளிக்கும் போராட்டம் இன்று (அக். 16) நடைபெற்றது.
பெரியகுளம் வடகரையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையை நோக்கி வந்த மாணவர் சங்கத்தினரை, காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தபோதிலும் காவல் துறையினரின் தடையை மீறி சிலை பீடத்தில் ஏறி நின்று அண்ணாவின் மீது மனுவை வைத்து கோசங்களை எழுப்பி மாணவர்கள் சங்கத்தினர் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.