தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்?" - சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை கோரிய கல்லூரி நிர்வாகம்! - தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தேனி: நீட் தேர்வின் போது மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவக்கல்லூரி இயக்குநர் மற்றும் காவல்நிலையத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் புகார் அளித்துள்ளார்.

NEET Exam

By

Published : Sep 18, 2019, 7:30 PM IST

தேனி மாவட்டம் கானா விலக்கு அருகே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இக்கல்லூரியில் இந்த கல்வியாண்டில் சேர்ந்துள்ள சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆண்டிற்கு 100 மருத்துவ மாணவர்களுக்கு இக்கல்லூரியில் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் இந்த கல்வி ஆண்டில் சேர்ந்த 100 மாணவ-மாணவிகளில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகன் நீட் தேர்வு எழுதும் போது ஆள்மாறாட்டம் செய்ததாகவும், தேர்விற்கான ஹால் டிக்கெட்டில் உள்ள படமும் மாணவனின் படமும் வெவ்வேறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து அந்த மாணவர் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், "முதலாமாண்டு மாணவர் உதித்சூர்யா என்பவர் மீது ஆள்மாறாட்டம் செய்து இங்கு படித்து வருவதாக ஈமெயில் வாயிலாக கிடைத்த புகாரின் பேரில், கல்லூரியில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இது சம்பந்தமாக மேல் நடவடிக்கை எடுப்பதற்காக மருத்துவக்கல்லூரி இயக்குநர் அலுவலகத்திற்கும், தேனி க.விலக்கு காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருவதால் தற்போது மேற்கொண்டு ஏதும் கூற இயலாது" என்றார்.

இது தொடர்பாக மருத்துவக்கல்லூரி வட்டாரத்தில் விசாரித்தபோது, "அந்த மாணவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தவர் என்பதும், இந்த ஆண்டு வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரிக்கு தேர்வானவர் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் நீட் தேர்வு, கல்லூரி மாணவர் சேர்க்கை என சம்பந்தபட்ட மாணவருக்குப் பதிலாக, 'நண்பன்' பட சினிமா பாணியில் வேறு ஒருவர் இவரது பெயரில் கல்லூரி வகுப்பில் பங்கேற்று இங்கு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சில நாட்களாகவே அந்த மாணவர் கல்லூரிக்கு வருவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பந்தப்பட்ட மாணவரின் தந்தையான சென்னையைச் சேர்ந்த மருத்துவர், தேனி அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருக்கும் ராஜேந்திரனின் நண்பர் என்றும் இருவருக்குமிடையே உள்ள நெருக்கத்தின் காரணமாகவே ஆள்மாறாட்டம் செய்து கல்லூரில் சேர்க்கை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறும்போது...

நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவ-மாணவிகளை சோதனை என்ற பெயரில் அலைக்கழிக்கும் அரசு இயந்திரம், ஆள்மாறாட்டம் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற கேள்வியெழுந்துள்ளது. இப்புகார் உண்மையா என்பதை ஆராய்ந்து இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை வெளிப்படையாக அரசு தெரிவிக்குமா என்று சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

இதையும் படிங்க...

சட்ட விரோதமாக எரிசாராயம் விற்பனை செய்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details