இந்திய நறுமணப் பொருள்கள் வாரியம் சார்பில் ஏலக்காய் வர்த்தகத்திற்கான ஏல மையம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே உள்ள புத்தடி, தமிழ்நாடு தேனி மாவட்டம் போடி ஆகிய இரு இடங்களில் செயல்படுகிறது. மின்னணு ஏல முறையில் வர்த்தகம் நடைபெறும் ஏலத்தில் தமிழ்நாட்டின் விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் அதிகளவில் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில், புத்தடியில் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புத்தடி மற்றும் போடி ஏலக்காய் ஏல மையத்தில் 100-க்கும் மேற்பட்ட கேரள, தமிழக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்வதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று நறுமணப் பொருள் வாரிய அலுவலர்கள் கூறுகின்றனர்.