தேனி:பழனிசெட்டிபட்டி அருகே வெற்றி திரையரங்கம் இயங்கி வருகிறது. இந்தத் திரையரங்கத்திற்கு படம் பார்க்கும் வரும் பொதுமக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிப்பதாக வெற்றி திரையரங்கம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
தற்போது தேனியை சேர்ந்த பாலஅய்யப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வெற்றி திரையரங்கிற்கு படம் பார்க்கச் சென்றுள்ளார். இதற்காக வெற்றி திரையரங்கில் பணம் கொடுத்து டிக்கெட்டை பெற்று படம் பார்க்க உள்ளே சென்றபோது அதன் ஊழியர்கள் பாலஅய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை தடுத்து நிறுத்தி லுங்கி அணிந்து வந்தால், படம் பார்க்க உள்ள அனுமதிக்கமாட்டோம் என்று தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலஅய்யப்பன் திரையரங்க ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ’லுங்கி அணிந்து கொண்டு தான் டிக்கெட்டை பெற்றேன். தற்போது அதே லுங்கி அணிந்து கொண்டுதான் படம் பார்க்க உள்ளே சென்றேன். டிக்கெட்டை மட்டும் கொடுத்த நீங்கள் படம் பார்க்க உள்ள அனுமதிக்க மாட்டீங்கன்னு சொன்னால் என்ன அர்த்தம். லுங்கி கட்டினால், நாங்க எல்லாம் மனுஷங்களா இல்லையா’ என்ன ஊழியர்களிடம் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.