தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் 12ஆவது வார்டுக்குட்பட்ட காந்திநகர் பகுதி உள்ளது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவரும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள், தெருக்களில் கறுப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனையறிந்து அங்கு வந்த அல்லிநகரம் காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கோரிக்கைகளை நகராட்சி, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனுவாக அளிக்கும்படியும் கூறினர். ஆனால் இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் கறுப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருப்பதாக காவல் துறையினரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் காவல் துறையினரின் சமரசத்தை அவர்கள் ஏற்க மறுத்தனர்.
கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த காந்திநகர் மக்கள் இது குறித்து காந்தி நகரைச் சேர்ந்த லிங்கேஸ்வரி கூறுகையில், “குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. கழிவு நீர் செல்வதற்கான வடிகால் வசதிகள் முறையாக இல்லாததால், சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு நாங்கள் உள்ளாகிறோம்.
மேலும், தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனே சாலைகளை கடக்கிறோம். அடிப்படை வசதிகள் கேட்டு நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது தெருக்களில் கறுப்புக் கொடி கட்டி எதிர்க்கிறோம். இதற்கடுத்தும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லையென்றால் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை காந்திநகர் மக்கள் புறக்கணிப்போம்” என்று கூறினார்.