தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி கிராமத்தில், கடந்த 16ஆம் தேதி இரவு நேரத்தில் அவ்வழியாக ஒரு ஆண், பெண் இரு சக்கர வாகனத்தில் ஒரு சாக்கு மூட்டையுடன் சென்றுள்ளனர். முல்லைப் பெரியாறு தடுப்பணைப் பகுதியில் மூட்டையை போட்டு விட்டு திரும்பிச் சென்று விட்டனர். இதனை அங்கு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் பார்த்துள்ளனர். சந்தேகப்படும் படியாக இருக்கவே சாக்கு மூட்டையுடன் ஆண், பெண் இரு சக்கர வாகனத்தில் வந்தது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது தான் அதிர்ச்சி காத்திருந்தது. முல்லைப் பெரியாறு தொட்டமாந்துறை பகுதியில் கிடந்த சாக்கு மூட்டையைத் திறந்து பார்த்த போது கை, கால்கள், தலை இல்லாமல் சுமார் 30 வயதுமிக்க ஒரு ஆண் உடல் கொடூரமான நிலையில் கிடந்தது. கொலையாளி யார் என்பது கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நள்ளிரவே மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையை காவல் துறையினர் துரிதப்படுத்தினர்.
மீனவர்கள் கொடுத்த தகவல், சிசிடிவி கேமராக்களில் குற்றவாளிகள் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி செல்வி (49), அவரது இளைய மகன் விஜயபாரத் (25) ஆகியோர் நள்ளிரவு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரிய வந்ததைத் தொடர்ந்து, இருவரையும் காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தலை, கை, கால்கள் இல்லாமல் கைபற்றப்பட்ட உடல் செல்வியின் மூத்த மகன் விக்னேஷ்வரன் (30) தான் என்பது மட்டுமல்லாமல், தாயும் இளையமகனும் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணையில் விக்னேஸ்வரன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு, கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.